07/05/2023
“வெங்கி ரு(ர)சிக்கிறான்”
3. சாம்பார் சாதம்
சாம்பார் சாதம் எனில் அதை இரண்டு வகையாக இல்லை 3 வகைகளாகப் பிரிக்கலாம்! கோல்கேட் டூத் பேஸ்ட்டின் விளம்பர பாணியில் சொல்வது எனில், ஒன்று(டொயாங்) சூடான சோற்றில் சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிடுவது, இரண்டு (டொயாங்) ரெடிமேடாக செய்த சாம்பார் சாத வகைகள், மூன்று (டொயாங்) பிஸிபேளாபாத் போன்ற அந்நிய மாநிலத்து சாம்பார் சாதங்கள்!
1 சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பிடும் முறை! சாம்பாருக்கு மட்டுமே குழைந்த சோறோ விறைத்த சோறோ ஆகாது! நன்கு வெந்து விறைப்பிற்கும் குழைவிற்கும் இடையே உள்ள நல்ல பதத்தில் சோறு வெந்திருக்கணும்! ரெண்டாவது சோற்றில் ஊற்றும் சாம்பார் நல்ல டெக்ஸ்ச்சரில் இருக்கணும்! அதாவது பருக்கள் போல பருப்புகள் தனியே தெரியாது..
இன்பாக்ஸில் வழிவது போல சாம்பாரில் பருப்பு குழைந்து கலந்து இருக்கணும். காய்கள் நன்கு வெந்து இருப்பது மிக மிக முக்கியம். அவரையோ, செளசெளவோ, பூசணியோ கையால் தொட்டாலே அப்படியே உதிரணும் சாம்பாரில் உப்பு காரம் சரியா இருக்கணும்! அதிலும் சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு 1 கரண்டி சாம்பார் ஊற்றினால் போதும் என்கிற..
இடத்தில் கர்ண மகராஜனைப் போல் ஒன்றரைக் கரண்டி ஊற்றி சோற்றை பிசைவது உயரிய பண்புகளில் ஒன்றாகும்! அதிலும் உருளைக் கிழங்கு காரக்கறி, வாழைக்காய் வறுவல் போன்ற கார கூட்டுகள் என்றால் ஒவ்வொரு உருண்டை சோற்றிற்கும் அதை கொஞ்சம் அதிகமாகவே சேர்த்து உண்பது சிறப்பு! அனுமன் போல அப்பளம் நிச்சயமாக சாம்பாருடன் இருந்தே ஆகணும்!
முட்டைகோஸ் பொரியல், காரட் பொரியல், அவியல், உசிலி, தக்காளி கூட்டு, புளி தொக்கு, வடகம், ஊறுகாய் இப்படி எதுவும் செட்டாவது சாம்பார் சாதத்திற்கு மட்டும் தான். சின்ன வெங்காய சாம்பார்களில் வெங்காயத்தை தூக்கி போட்டுவிட்டு சாப்பிடும் மூடர்களுக்கு வாழும் போதே நரகம் உறுதி! சாம்பாரில் போட்ட கறிவேப்பிலையை கூட விடக்கூடாது! அதிலும் வாசனைக்கு..
பெருங்காயம் போட்ட சாம்பார் எல்லாம் தெய்வ லெவலாகும்! நீங்க பீன்ஸ் பொரியல், எண்ணெய் கத்திரிக்காய் வறுவலோடு சூடான சோற்றில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அவரைக் காய் சாம்பார் ஊற்றி சாப்பிட்டு இருக்கிங்களா? அதிலும் வடகம் அப்பளம் கூட வச்சி சாப்பிட்டா மட்டன் பிரியாணி எல்லாம் அதுக்கு முன்னாடி ஈடாகுமா சார்! அதே போல தக்காளி வெண்டைக் கூட்டும்..
அவியல், சேனை வறுவல், சோயா உருளை பால்கறி, புளிக்கறி இதோடு பூசணிக்காய் சாம்பார் சாப்பிடுவதும் சுவர்க்கம். சிவப்பு பூசணிக்காய் சாம்பாருக்கு உருளை, சேனை காரக்கறி மாங்காய் தொக்கு ஊறுகாய் இருந்தா சட்டி சோறு இறங்கும்! இதில் நெய் ஊற்றாது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஊற்றுவது சிறப்பு! வடை, போண்டா, முறுக்கு, மிக்ஸர், போன்ற பலகாரங்களும்..
சாம்பாருக்கு நல்ல நண்பர்களே! அசைவப் பிரியர்கள் ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை மசாலா, போன்லெஸ், சிக்கன் 65, மட்டன் சுக்கா, ஈரல் வறுவல், நெஞ்சு சாப்ஸ், மீன் வறுவல் என காரமாக வெரைட்டியாக தொடு கறிகளை வைத்து சாம்பார் சாதத்தை நன்கு ரசித்து உண்ணலாம்! சோற்றில் ஊற்றி பிசைவது இப்படின்னா ரெடிமேடான இரண்டாவது சாம்பார் சாதத்திற்கு?!
இவை குழைவாக வெந்த சோற்றில் செய்யப்படுவது! சாம்பாரில் எத்தனை வகை காய்களை போட முடியுமோ அத்தனையும் போட்டு செய்திருப்பார்கள்! பெரும்பாலும் ஸ்பூனில் உண்ணும் உணவு இது இதற்கும் மேற்கூறிய அனைத்து கூட்டு பொரியல்கள், அசைவ கறிவகைகள், முட்டை வகைகள், ஊறுகாய்கள், சிறப்பாக இருக்கும்! ஆனால் கையில் பிசைந்த சாம்பார் ருசி இதில் வராது!
மூன்றாவது பிஸிபேளா பாத்! இதில் பட்டை மசாலா, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து இருப்பதால் சூடாக ஒரு ஸ்பூன் அள்ளி ருசித்தாலே கன்னக் கதுப்புகள் இரண்டிலும் காரம் அனலாகத் தெரியும்! இதற்கு காராபூந்தி ஒரு நல்ல காம்போவாகும்! கொதிக்கக் கொதிக்க இதை ஒரு வாய் ஸ்பூனில் அள்ளி க்ரிஸ்பியான காராபூந்தியோடு விழுங்குவது இன்பமயமாகும்!
இந்த காரத்திற்கு தயிர்வடை அல்லது தயிர்/டாங்கர் பச்சடி சிறந்த குளு குளு இணையாகும்! அதிலும் சேமியா பிஸிபேளா கிடைத்தால் மொறு மொறுன்னு சூடா ஒரு உளுந்தவடை சேர்த்து உண்பது சிறப்பு! ஓமப்பொடி,காராசேவு, பட்டர் முறுக்கு, இவை எல்லாம் பிஸிபேளாபாத்தின் டீம்மேட்ஸ்! கோடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சோற்றில் ஊற்றி சாப்பிடும் சாம்பாரே பிராட்மேன்!